சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளததாகவும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயம்பேடு - அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் செயின்ட் தாமஸ் மவுண்ட் முதல் சென்னை சென்ட்ரல் இடையேயான நேரடி ரயில் சேவை 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடம் என்பது சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும் செல்லும் மார்க்கம் ஆகும். பச்சை நிற வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையில் செல்லும் மார்க்கம் ஆகும். இப்போது கோளாறு பச்சை நிற வழித்தடத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே நேரடி ரயில் சேவை நிலையங்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இருப்பினும், சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு இடையேயும், அசோக் நகர் மற்றும் செயிண்ட் தாமஸ் மவுண்டிலிருந்தும் வழக்கமான சேவைகள் வழங்கபட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன. எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.