தினம் ஒரு சமையல் - 2: வேர்க்கடலை சாதம்

By News Dsk

வேர்க்கடலை சாதம்: சமைப்பதை விட என்ன சமைப்பது என்று முடிவு செய்வதே மிகவும் கடினமான வேலை. தினம் ஒரு சமையல் பகுதி என்பது, இன்று என்ன சமையல் செய்வது, lunch box க்கு என்ன செய்வது, குழந்தைகளுக்கு பிடித்த உணவை எப்படி சமைப்பது என்று தினம் தினம் புலம்பும் இல்லத்தரசிகளுக்கு நம்மால் முடிந்த உதவியாக அவர்களுக்கு எளிய மற்றும் சுவையான உணவு வகைகளை பரிந்துரைப்பதே.

விசேஷ நாட்களில் மட்டுமன்றி தினமும் வீட்டில் சிறப்பான உணவு வகைகள் சமைத்து வீட்டில் உள்ளவர்களை அசத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். அந்த வகையில் எளிமையான முறையில் வேர்க்கடலை சாதம் நம் வீட்டில் செய்து இன்று அசத்தலாம் வாங்க…

தேவையான பொருட்கள் அளவு
அரிசி முக்கால் கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

பின்வருவனவற்றை வறுத்து அரைத்து பேஸ்ட் செய்து தனியே வைக்கவும்.

வேர்க்கடலை - அரை கப்
எள்ளு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 எண்கள்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 அங்குல துண்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - அரை தேக்கரண்டி

தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவையான அளவு

செய்யும் முறை:

1. அரிசியை வேக வைத்து உதிரியாக சாதத்தைத் தயார் செய்து கொள்ளவும்.
2. மிதமான சூட்டில் வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
3. பின்பு வெறும் கடாயில் மிளகாய் வற்றல், மிளகு, எள் மற்றும் உளுந்தை சேர்த்து நன்கு வறுக்கவும்.
4. பிறகு தேங்காய் துருவலுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
5. மிக்ஸியில் வேர்க்கடலையைத் தவிர வருது வைத்துள்ள மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு பொடித்துக் கொண்டு பிறகு அதனுடன் வேர்க்கடலையையும் சேர்த்து நன்கு கொர கொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
6. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் மேலே சொல்லியுள்ள தாளிப்பு பொருட்களை கொண்டு தாளித்து பின்பு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
7. இப்பொழுது இந்த தாளிப்புடன் சாதம் மற்றும் வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து 2 நிமிடங்கள் லேசான சூட்டில் வைத்து கலக்கி இறக்கவும்.
8. நல்ல சூடான வேர்க்கடலை சாதம் ரெடி. சூடாக பரிமாறவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE