2026-ம் ஆண்டின் பிரபலமான நடிகர்களின் பான் இந்தியா படங்கள்

By News Dsk

இந்த 2026-ஆம் ஆண்டு துவக்கத்தின் முதல் பான் இந்தியா படமாக பிரபாஸ் நடித்து தெலுங்கில் வெளியான 'தி ராஜா சாப்' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், பான் இந்தியா படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் 2026-ம் ஆண்டு வெளிவர இருக்கும் பிரபலமான நடிகர்களின் பான் இந்தியா படங்களின் பட்டியல் குறித்த செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இதோ.,

டாக்சிக் (toksik):

கீது மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைப்பில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுடாரியா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், அக்ஷய் ஓபராய் என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் கன்னட, ஆங்கிலப் படம். மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் 'கேஜிஎப் 2' படத்தின் வெற்றி, வசூலைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உள்ளது.

துரந்தர் 2 (Dhurandhar):

ஆதித்ய தர் இயக்க, ஷஷ்வத் சச்தேவ் இசையமைப்பில், ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப் படம். அடுத்த மாதம் மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை முதல் பாகம் போல ஹிந்தியில் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.

முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி 1300 கோடி வசூலித்தது போலவே இந்த இரண்டாம் பாகமும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்பா (Alpha):

யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் தயாரித்து, ஷிவ் ராவைல் இயக்கத்தில், ஆலியா பட், ஷர்வரி, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம். ஏப்ரல் 17-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்றும் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

ஜெயிலர் 2 (jailer):

2023-ல் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூலித்த 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமாக, நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, எஸ்ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படமாக இப்படம் தயாராகி வருகிறது.

படத்தின் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிட்டாலும் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் கண்டிப்பாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

பெத்தி (Peddi):

ஏப்ரல் 30- ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில், ராம் சரண், ஜான்வி கபூர், ஷிவராஜ்குமார் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'பெத்தி'.

'RRR' படம் மூலம் பான் இந்தியா நடிகராக பிரபலமானார் ராம் சரண் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாயணா - பாகம் 1 (Ramayana-1):

நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஏஆர் ரகுமான், ஹன்ஸ் ஜிம்மர் இசையில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் மற்றும் பலர் நடிப்பில், VFX , AI போன்ற இந்த கால தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக தயாராகி வரும் வரலாற்று காவிய படம். இந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது.

இதுதவிர மேலும் சில படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகலாம் என்றும் சில படங்கள் குறிப்பிட்ட சில மொழிகளில் மட்டும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவரலாம் என்றும், பான் இந்தியா படங்கள் குறைந்தபட்சம் 1000 கோடி வசூலைப் பெறும் என்ற நம்பிக்கையும் திரையுலகில் உள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE