சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 4பேர் காயம், 8 அறைகள் தரைமட்டம்

By News Dsk

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சின்னகாமன் பட்டி - யில் அமைந்துள்ளள கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று (01 ஜூலை 2025, செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி-சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன் பட்டியில் கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ( பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 50- க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

வழக்கம் போல இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி வேலையில் ஈடுபட்டிருந்த போது மருந்து கலவை செய்யும் அறையில் காலை 8.30 மணியளவில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அருகருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரை மட்டமானது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் ஆலையில் பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE