அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தவெக தலைவர் விஜய்!

By News Dsk

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் என்ற ஊரில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் திரு. விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தவெக தலைவர் திரு. விஜய், ரூபாய் 2 லட்சம் நிதி உதவியும் அளித்தார். மேலும் குடும்பத்தினருடன் பேசிய விஜய் “உங்களுக்கு எப்போதும் நாங்கள் துணையிருப்போம். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்களது தொடர் ஆதரவை வழங்குவோம்” என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமாரின் தம்பி "விஜய் ரூபாய் 2 லட்சம் நிதி உதவி அளித்தத்துடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக கூறினார்" என்று தெரிவித்தார்.

விஜய் வரும் தகவல் ரகசியமாக பார்த்துக் கொள்ளப்பட்டாலும் அஜித்குமாரின் வீட்டு வாசலில் ஏராளமான மக்கள் விஜய்யை பார்க்க குவிந்தனர். இதனால் 10 நிமிடங்களுக்குள் ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பின் போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உடனிருந்தார்.

முன்னதாக, காவல் துறையின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE