கடலூர்: இன்று காலை கடலூர் அருகே பள்ளி வாகனத்தின் மீது ரயில் மோதிய விபத்தில் பலியாகிய குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் சிகிச்சையில் உள்ளனர்.
கடலூரில் நிகழ்ந்த இந்த கூற விபத்தில் நிமிலேஷ், சாருமதி என்ற 2 மாணவர்கள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன்(15) என்ற குழந்தையும் உயிரிழந்தது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. செழியன் என்ற மாணவன் ஏற்கனவே உயிரிழந்த சாருமதியின் சகோதரர் ஆவர். ஒரே குடும்பத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அக்குடும்பத்தை உருக்குலைய செய்துள்ளது.
நிவாரணம்:
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்தது எப்படி?
இன்று காலை 8 மணி அளவில் கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் (8 ஜூலை, 2025) 4 மாணவர்களுடன் செம்மகுப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது. இதில் பள்ளி வேன் முழுவதிலுமாக உருக்குலைந்தது.
தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ்(12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி(16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்(15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து கடலூர் பகுதியில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட்கீப்பர் பங்கத் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.