குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

By News Dsk

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதன்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் 1 மாதத்துக்குள்ளும், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள்ளும் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயித்தது இதுவே முதல் முறை ஆகும். இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த மே 13-ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கேள்விகள் விபரம் பின்வருமாறு,

1. ஒரு மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன?.

2. அவ்வாறு ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, மந்திரிசபையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?.

3. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், கவர்னரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

4. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா?.

5. கவர்னரின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

6. அரசியல் சாசனத்தின் 201-வது பிரிவின்கீழ், ஜனாதிபதியின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா?.

7. ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாசனம் காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?.

8. ஜனாதிபதியின் அனுமதிக்காக கவர்னர் மசோதாவை அனுப்பி வைக்கும்போது, அரசியல் சாசனத்தின் 143-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற முடியுமா?.

9. ஒரு சட்டம் அமலுக்கு வரும் முன்பு, கவர்னரும், ஜனாதிபதியும் அரசியல் சாசனத்தின் 200 மற்றும் 201-வது பிரிவுகளின்கீழ் எடுக்கும் முடிவுகள் கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? மசோதா, சட்டம் ஆவதற்கு முன்பு, அதன் பொருள் குறித்து கோர்ட்டு விசாரிக்க அனுமதி உள்ளதா?.

10. ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உத்தரவுகள் மற்றும் அதிகாரங்களை அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் வேறுவகையில் பிறப்பிக்க முடியுமா?.

11. மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை கவர்னரின் ஒப்புதல் இல்லாமலே அமலுக்கு கொண்டுவர முடியுமா?.

12. அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது கட்டாயம் இல்லையா?.

13. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்கள், நடைமுறை சட்டத்துக்கு மட்டும் உட்பட்டதா? அல்லது அமலில் இருக்கும் அரசியல் சாசன நடைமுறைகளுக்கு முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வழி செய்கிறதா?.

14. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான சச்சரவுகளை அரசியல் சாசனத்தின் 131-வது பிரிவின்கீழ் சிறப்பு வழக்கு தொடுக்காமல், வேறு வகைகளில் தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அரசியல் சாசனம் தடையாக உள்ளதா?.

இந்த கேள்விகளை மத்திய அரசு குடியரசு தலைவர் மூலமாக சுப்ரீ்ம் கோர்ட்டுக்கு நெருக்கடி கொடுப்பதாக பல்வேறு எதிர் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் இந்த விவகாரம் பேசுபொருளானது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில் நேற்று (22-ஜூலை, 2025) விசாரணைக்கு வந்தது.

நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்து வழக்கை வரும் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE