விவசாயிகள் நலனுக்காக எந்த விலையும் கொடுக்க தயார்: பிரதமர் மோடி உறுதி

By News Dsk

புதுடெல்லி: விவசாயிகளின் நலனுக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலன்களில் மத்திய அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத் தராது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய வரி விகிதங்களை அறிவித்து வரும் நிலையில் வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிரான அமெரிக்க பால் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும் அமெரிக்க வர்த்தக விருப்பத்துக்கு இந்தியா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.

இதேபோல் அமெரிக்காவிலிருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களான கோதுமை, சோயாபீன், சோளம், ஆப்பிள், திராட்சை வகைகளை இந்தியாவில் விற்பனை செய்யவும் அந்த நாடு அனுமதி கோரி வரும் நிலையில் அதற்கும் மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டு அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் நிர்பந்தத்திற்கும் மத்திய அரசு செவிசாய்க்க வில்லை.

இந்த சூழலில், வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய, எம்.எஸ்.சுவாமிநாதன் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நான் குஜராத் முதல்வராக இருந்த காலத்திலேயே அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தேன். ஒரு காலத்தில் குஜராத்தில் வறட்சி, புயல் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. அப்போது,குஜராத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி எம்.எஸ்.சுவாமிநாதன்தான் எங்களை வழிநடத்தினார்.

தமிழகத்தில் உள்ள அவரது ஆராய்ச்சி அறக்கட்டளை மையத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்கிறேன். கடந்த 2017-ல் அவரது புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த 2018-ல் வாராணசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிராந்திய மையம் திறக்கப்பட்டது. அப்போது அவரது வழிகாட்டுதல்கள் பெரிதும் பயனுள்ளதாக இருந்தன.

கடந்த ஆண்டு அவருக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்கும் வாய்ப்பு எனது தலைமையிலான அரசுக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட அவர், இயற்கை விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்தார். அவரை கவுரவிக்கும் வகையில் ‘உணவு மற்றும் அமைதிக்கான எம்.எஸ். சுவாமிநாதன் விருது' நிறுவப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பால், பருப்பு வகைகள், சணல் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திலும், அரிசி,கோதுமை, பருத்தி, பழங்கள், காய்கறிகள், மீன் உற்பத்தியில் 2-வது இடத்திலும் உள்ளது. எண்ணெய் வித்துக்கள் சாகுபடியிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறோம்.

விவசாயிகளின் நலனுக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலன்களில் மத்திய அரசு எந்த சமரசம் செய்து கொள்ளாது. அவர்களது நலனை ஒரு போதும் விட்டுத் தராது. அவர்களின் நலனுக்காக மத்திய அரசு எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறது. அவர்களது நலன்களை காக்க ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு துணையாக நிற்கிறது.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அவர்களது விவசாய செலவினங்களை குறைக்கவும் பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாடு முழுவதும் 10,000 -கும் அதிகமான வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எளிதாக விற்பனை செய்ய மின்னணு தேசிய வேளாண் சந்தை வெற்றிகரமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் உணவு பதப்படுத்தும் மையங்கள், சேமிப்பு கிடங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமரின் இந்த பேச்சு அமெரிக்காவிற்கான பதிலடியாகவும், விவசாயிகளுக்கு மேலும் நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE