மத்திய பட்ஜெட் 2026-27: தனிநபர் வருமான வரி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?

By News Dsk

புதுடெல்லி: 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்​களவையில் இன்று (பிப் 1, 2026) காலை 11 மணிக்கு தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள், தனிநபர் வருமான வரி, புதிய திட்டங்கள், விலை அதிகரிக்கும் மற்றும் விலை குறையும் பொருட்கள் போன்ற முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

பட்ஜெட் 2026 - முக்கிய அம்சங்கள்:

1. நாடு முழுவதும் மாவட்டம் தோறும் பெண்கள் விடுதி ஒன்று அமைக்கப்படும்.

உயர் கல்வித் துறையில் அதிக முதலீடு செய்வதனால் அதன் மூலம் பெண்கள் அதிகளவில் பயன் பெரும் வகையில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் விடுதி ஒன்று உருவாக்கப்படும். இதனால் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் படிப்பு சதவீதம் அதிகரிக்கும்.

2. நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை.

அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித் தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.மேலும் உள்நாட்டு நீர்வழிகளுக்கான கப்பல் பழுது பார்க்கும் சூழலமைப்பு வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும்.

3. விளையாட்டுத் துறையை மாற்றி அமைக்க ஒரு திட்டம்.

விளையாட்டுத் துறையில் மேலும் பல புதிய வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றி அமைப்பதற்காக ’கேலோ இந்தியா’ திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் தரம் உயர்ந்த விளையாட்டு மைதானங்கள் உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

4. தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும், மதிப்புக்கூட்டவும் ‘தேங்காய் ஊக்குவிப்புத் திட்டம்’ தொடங்கப்படும்.

5. தனிநபர் வருமான வரி.

புதிய 2025-வருமான வரிச் சட்டம் வரும் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் முழு பயன்பாட்டுக்கு வரும் என்றும், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பபட்டுள்ளது.
புதிய வருமான வரியின்படி ஆண்டுக்கு ரூ. 12.75 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. பட்ஜெட் 2026 - விலை குறையும் பொருட்கள்:

* 17 வகையான புற்றுநோய், நீரிழிவு மற்றும் 7 உயிர்காக்கும் மருந்துகள்
* மின்சார வாகன பேட்டரிகள்
* விளையாட்டு உபகரணங்கள்
* சோலார் பேனல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள்
* வெளிநாட்டு கல்வி செலவு
* தோல் பொருட்கள், காலணி பொருட்கள்
* மைக்ரோவேவ் ஓவன்கள்
* லித்தியம் பேட்டரி பாகங்கள்
* சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
* வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள்
* மதுபான கழிவுகள்

7. பட்ஜெட் 2026 - விலை அதிகரிக்கும் பொருட்கள்:

ஆடம்பர மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் கீழ்கண்ட பொருட்களின் விலை வெகுவாக உயரும்.

* வெளிநாட்டு கைக்கடிகாரங்கள்
* வெளிநாட்டு கார்கள்
* சிகரெட், பீடி
* பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள்
* இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்

மேலும், இந்தியாவை உலகளாவிய உயிர்காக்கும் மருந்து உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வரும் 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீட்டில் ‘பயோ பார்மா சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் உயிர் காக்கும் மற்றும் அதற்கு இணையான மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE