இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 19, 2026) @Topnewstamil #BREAKING #TAMILNEWS

By News Dsk

மார்ச் 19, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஈரானின் முக்கிய எரிவாயு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி:

ஈரானின் முக்கிய எரிவாயு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, பல வளைகுடா எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 115 டாலரைத் தாண்டியது. மேலும், பங்குச் சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன.

ஒரே நாளில் 2முறை வீழ்ச்சியடைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை குறைந்து, கிராம் ரூ.13,775-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை இன்று ஒரு கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பெருமிதம்!

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்: நாம் தமிழர் கட்சியின் வாக்குறுதி!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்றும் தமிழகத்தின் தலைநகர் சென்னையை என்பதை மாற்றி தமிழ்நாட்டுக்கு திருச்சி உள்ளிட்ட 5 தலைநகரங்கள் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் தமிழர்களுக்கு முன்னுரிமை, தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை, ஆடு, மாடு வளர்ப்பு அரசுப் பணி போன்ற பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை மார்ச் 21: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு.

இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாதமாக ரமலான் நோன்பு விரதம் இருந்துவரும் நிலையில் பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று மாலை பிறை தெரியாததால் மார்ச் 21ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE