மார்ச் 21, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
ரம்ஜான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் "இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளமை அளிக்க" வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி NDA கூட்டணி: நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது!
புதுச்சேரி NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்கள், பாஜக 10 இடங்கள், அதிமுக, லஜக தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
பிரீமியம் பெட்ரோலின் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் காரணமாக பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
முதல் நாளிலேயே ரூ.240 கோடி வசூல்: துரந்தர் 2 சாதனை!
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம், முதல் நாளிலேயே ரூ.240 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.145 கோடி நிகர வசூலைப் பெற்று இந்தியாவில் ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தமிழகத்தில் உருவானது புதிய கூட்டணி:
திருமதி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும், திரு ராமதாஸ் தலைமையிலான பாமகவும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். நேற்று இருவரும் கூட்டாக தைலாபுரத் தோட்ட இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதை உறுதிப்படுத்தினார்.
பியூஷ் கோயல் சென்னை வருகை ஒத்திவைப்பு!
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.