இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
ஹார்முஸ் ஜலசந்தி: ஒப்பந்தத்தை மீறிய அமெரிக்கா: மீண்டும் மூடிய ஈரான்!
அமெரிக்கா - ஈரான் இடையே இறுதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது ஒப்பந்த விதிமீறல் என்பதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடி கட்டுப்பாடுகள் விதிப்பதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
--------------------------------
தொகுதி மறுவரையறை: 2051 வரை தள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி பெற்றதை முன்னிட்டு இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட காணொலியில் "தொகுதி மறுவரையறை செய்வதை 2051-ம் ஆண்டு வரை தள்ளிவைக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
--------------------------------
மகளிர் உரிமைக்கு எதிராக திமுக - காங் செய்த துரோகம்: அதிமுக, பாஜக , பாமக, தமாகா குற்றச்சாட்டு!
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டிருப்பது, மகளிர் அதிகாரம் மற்றும் மகளிர் உரிமைக்கு எதிராக திமுக - காங்கிரஸ் கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம் என்று அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட NDA கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
--------------------------------
திமுக-வின் அனைத்து ஊழலையும் விசாரிப்போம்: பிரதமர் மோடி உறுதி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி "திமுகவின் அனைத்து ஊழலையும் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்" என்று அறிவித்துள்ளார்.
--------------------------------
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அனுமதியை நீட்டித்தது அமெரிக்கா!
ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு ஒரு மாத காலம் அமெரிக்கா அளித்த விலக்கு ஏப்ரல் 11-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 1 மாதம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க நிதித் துறை அறிவித்துள்ளது.
--------------------------------
தமிழகத்தில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.
--------------------------------
ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.