இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை(23-ஏப்ரல்) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 300 கம்பெனி துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
----------------------------------------------
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் முழுவதும் குண்டு மழை பொழியும்: ட்ரம்ப் எச்சரிக்கை!
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்நிலையில் போர்நிறுத்தம் இன்று நிறைவடையும் நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால், ஈரானில் குண்டு மழை பொழியும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
----------------------------------------------
ஹார்முஸ் ஜலசந்தியில் 14 இந்திய கப்பல்கள்: பத்திரமாக வெளியேற்ற அரசு தீவிரம்!
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய 14 கப்பல்கள் சிக்கியுள்ளன. இவற்றில் மூன்று பெரிய எண்ணெய் கப்பல்களும், ஒரு பெரிய எல்பிஜி கப்பலும் அடங்கும். இந்த கப்பல்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
----------------------------------------------
மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு: 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு!
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டத்தில் 152 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
----------------------------------------------
எம்.பி.க்களை அவதூறாகப் பேசினார் பிரதமர் மோடி: சபாநாயகரிடம் நோட்டீஸ்!
ஏப்ரல் 17-ம் தேதி மக்களவையில் அரசியலமைப்பு 131-வது திருத்த மசோதா, 2026 தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 18-ம் தேதி பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மசோதாவைத் தடுத்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்களைப் பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார் என்றும் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
----------------------------------------------
இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்!
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2025-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது என்றும் உலக நாடுகளில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அமெரிக்கா வரி விதிப்பு போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 6.6 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------
டெல்லியை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்: ஐபிஎல் 2026!
உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற, ஐபிஎல் 2026 தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. 243 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.