மே 06, 2026: இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
நாளை பதவியேற்கிறார் விஜய்: நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்!
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் அனுமதியின் பேரில் முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்புக்கான ஏற்பாடுகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து வருகின்றன. அவருடன் செங்கோட்டையன், ஜேசிடி. பிரபாகர், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
----------------------------
முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து: மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், வெற்றிப் பயணம் ?
முதல்வராக நாளை பதவியேற்கும் விஜய், ‘‘தகுதியுள்ள வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், நகரப் பேருந்துகள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்' ஆகிய 2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் முதல் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
----------------------------
மேற்கு வங்கம், அசாம் முதல்வர்கள் தேர்வு: பார்வையாளர்களாக அமித் ஷா, நட்டா நியமனம்!
மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கி உள்ளது. முதல்வர்களை தேர்ந்தெடுக்க மத்திய பார்வையாளர்களாக அமித் ஷா மற்றும் நட்டாஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
----------------------------
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் தோல்வி அடையவில்லை மாறாக எங்கள் வெற்றி களவாடப்பட்டுள்ளது என்றும் நான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்துள்ளார்.
----------------------------
புதிய அரசு பதவியேற்பு: தலைமைச் செயலாளர், டிஜிபி, அதிகாரிகள் ஆலோசனை!
தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் பங்கேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
----------------------------
பி.எப். ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி தற்போது ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உள்ளது. இத்தொகை ரூ.7,500 ஆக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
----------------------------
டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே:
அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.