நேர்மையா இருந்தா என்ன கிடைக்கும்? இதோ நிகழ்நேர உதாரணம் தூய்மை பணியாளர் பத்மா !!!

By News Dsk

சென்னை: நேர்மையா இருந்து என்னத்த சாதிச்சுட்ட? அதனால உனக்கு என்ன கெடச்சிருச்சு? என்று பலர் பேச கேட்டிருப்போம். இதை கேட்கும் போது அதுவும் சரிதானே என்ற மனநிலை கூட பலருக்கு தோன்றலாம். ஆனால் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் அது நம்மை எப்படி பெருமைப்படவைக்கும் என்பதற்கு ஒரு நிகழ்நேர உதாரணம் தூய்மை பணியாளர் பத்மா !!! அப்படி என்னதான் நடந்தது என்று பார்க்கலாம் வாங்க.

மிகவும் பிரபலமான சென்னை திரு​வல்​லிக்​கேணி, பிள்​ளை​யார் கோயில் தெருவைச் சேர்ந்​த பத்மா(48) மாநகராட்சியில் தூய்​மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தி.நகரில் உள்ள வண்​டிக்​காரன் பகு​தி​யில் கடந்த மாதம் 11-ம் தேதி பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​ போது, சாலை​யில் கிடந்த பையை எடுத்துப் பார்த்தபோது அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்​துள்ளது. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உடனடியாக அதை அருகில் இருந்த பாண்​டிபஜார் காவல் நிலை​யத்தில் ஒப்படைத்திருப்பதும், விசா​ரணை​யில்அது நங்கநல்லூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய​வந்​துள்ளது. இந்த நிகழ்வு தான் இப்பொழுது தமிழகம் மட்டுமன்றி சமூக ஊடகங்கள் அனைத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

கீழே கிடந்த நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்​மாவுக்கு பாராட்டு​கள் குவிந்து வருகின்றன. முதல்​வர் ஸ்டா​லினும் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி ரூ.1 லட்சத்​துக்​கான வெகுமதியை வழங்​கி​னார்.

அதைத் தொடர்ந்து சென்னை மத்​திய கோட்​டத்​தின் முது​நிலை அஞ்​சல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் சார்பில் "மை ஸ்டாம்ப்" - ல் பத்​மா​வின் ஃபோட்​டோவுடன் அஞ்​சல் தலை வெளி​யிட்டு கவுரவப்படுத்தியது.

மேலும் சில நிறுவனங்கள், ஓய்வுபெற்ற நீதியரசர்கள், நகைக்கடை அதிபர்கள், சமூகத்தின் பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும், தங்கள் வீட்டுக்கு அழைத்தும் பாராட்டினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, இன்று நடிகர் ரஜினிகாந்த்தும் பத்மாவை நேரில் தன் வீட்டிற்கு வரவைத்து பாராட்டி கவுரவித்தத்துடன் தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார்.

பத்மா செய்தது ஒரு சிறிய சாதாரண நிகழ்வாக தோன்றலாம். ஆனால் உழைக்காமல் பணம் சம்பாதிப்பது, சோம்பேறித்தனம், மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படுவது , கொள்ளை, வழிப்பறி போன்ற போக்கு அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இவர் போன்ற சிலரே அத்தகைய எண்ணம் கொண்டவர்களை நல்வழிப்படுத்தும் ஆசான்கள். இன்றைய சமுதாயத்திற்கு பத்மாவின் செயல் நேர்மை, மனிதநேயம், பொறுப்புணர்வு குறித்த பாடமாகவும், விழிப்புணர்வாகவும் அமையும். அதுமட்டுமன்றி அவர்கள் செய்யும் தொழிலுக்கு சமூகத்தில் நன்மதிப்பையும், பெருமையையும் தேடித்தரும்.

சிறக்கட்டும் பத்மாவின் செயல். குவியட்டும் பாராட்டுகளும் பரிசுகளும் !!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE