காதல் - இதயங்களின் சங்கமம்: உரிமைகளை விட உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.. #ValentinesDay #Loversday 

By News Dsk

சுமார் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில், ரோமப் பேரரசை ஆட்சி செய்த பேரரசர் Claudius II ஒரு சட்டம் கொண்டு வந்தார். அந்த சட்டப்படி, இளம் வீரர்கள் திருமணம் செய்து கொண்டால் போரில் கவனம் குறையும் என்பதால் திருமணத்தைத் தடை செய்தார். இந்த சட்டத்தை எதிர்த்து, செயின்ட் வாலண்டை(Saint Valentine) காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு, பிப்ரவரி 14-ம் தேதி தூக்கிலிடப்பட்டார் என்று நம்பப்படுகிறது.

காதல் தினமாக (Lovers Day) மாறியது எப்படி?

செயின்ட் வாலண்டைன் (Saint Valentine) தியாகம் செய்த தினத்தை நினைவுகூர, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அவரது நினைவு நாளாகக் கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு மத நினைவு நாள். ஆனால் காலப்போக்கில் ஐரோப்பிய இலக்கியங்கள், கவிஞர்கள், கலாச்சார மாற்றங்கள் இவற்றின் மூலம், வாலண்டைன்ஸ் டே ரோமான்டிக் காதலின் நாளாக பரவியது. பின்னர் வணிக உலகம் கார்டுகள், பரிசுகள், சாக்லேட்கள் மூலம் இதை உலகளாவிய திருநாளாக மாற்றியது.

தற்போதைய இந்த காதலர் தினம் பொதுவாக காதல், ரோஜா, சாக்லேட், பரிசுகள் என்பவற்றுடன் இணைத்து மட்டுமே பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு மகிழ்ச்சியின் நாள்; சிலருக்கு வெறும் வணிகத் திருவிழா; இன்னும் சிலருக்கு தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும் நாளாகவும் தெரிகிறது. ஆனால் உண்மையில், வாலண்டைன்ஸ் டே என்பது காதலை மட்டும் அல்ல, மனித உணர்வுகளின் மதிப்பை நினைவூட்டும் ஒரு நாள்.

இன்று, வாலண்டைன்ஸ் டே-யை பெரும்பாலும் இளம் காதலர்கள், திருமணமான தம்பதிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்ல விரும்புபவர்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கு இந்த நாள் நினைவுகளைக் கொடுக்கும், உறவுகளை நெருக்கமாக்கும் ஒரு சிறப்பு நாளாக இருக்கிறது.

அதேபோல காதலை தினமும் காட்ட வேண்டும் என்று நம்புபவர்கள், அதிக வணிகமயமாக்கப்பட்ட நாளாக பார்ப்பவர்கள், தனிப்பட்ட அல்லது கலாசார காரணங்களால் தவிர்ப்பவர்கள் போன்றோர் இதை கொண்டாடாமலும் இருக்கிறார்கள், அவர்களது காரணங்களும் மதிக்கப்பட வேண்டியவையே.

வாலண்டைன்ஸ் டே நல்லதா கெட்டதா என்பதில்லை - நாம் அதை எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதே முக்கியம். வெளிப்படையான காட்சிகளுக்காக அல்ல, மனதார உணரப்படும் காதலுக்காக இந்த நாள் இருக்க வேண்டும்.

காதல் ஒரே நாளுக்கானது அல்ல. ஆனால் வேகமாக ஓடும் வாழ்க்கையில், உணர்வுகளுக்கு நேரம் ஒதுக்க மறந்துவிடும் மனிதனுக்கு, இந்த ஒரு நாள் அதை நினைவூட்டுவதில் தவறு இல்லை - அது அனைவரையும் இணைக்கும் வகையில் இருக்கும்வரை.

இந்தக் காதலர் தினத்தில் அன்புக்குரியவர்களுக்கு ஒரு ரோஜாவைக் கொடுப்பதை விட அவரின் கண்ணீரைத் துடைக்க முயற்சி செய்யுங்கள். தியாகமும், மரியாதையும் கலந்த காதலே காலத்தை வென்று நிற்கும். இந்தத் காதலர் தினத்தில், விலையுயர்ந்த பரிசுகளை விட, ஒருவருக்கொருவர் "மரியாதை" மற்றும் "உண்மையான அக்கறை" ஆகியவற்றை பரிசாக வழங்குவோம்.

இந்தக் காதலர் தினத்தில் காதல் என்ற பெயரில் யாரையும் கட்டாயப்படுத்தாமல், பிறர் சுதந்திரத்தை மதிக்கப் பழகுவோம். வன்முறையைத் தவிர்த்து, அன்பைப் பகிருவோம். காதல் ஒரு நாள் அல்ல - அது மனிதனின் அடையாளம்!!!.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE