தூத்துக்குடி: உலகப்புகழ் பெற்ற முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஜூலை 7, 2025) காலை மஹா கும்பாபிஷேகம் காலை 6:22 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாக சாலையில் 71 ஹோமகுண்டங்கள், 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 வகையான மூலிகைகள் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு, கடந்த ஜூன் 26-ஆம் தேதி முதல் யாகசாலை திரு பிச்சை சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் யாகசாலை பூஜைகள் துவங்கின.
மேலும், நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து பட்டாச்சாரியார்கள் யாகசாலை சிறப்பு பூஜை தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கிய 12-ம் கால யாகசாலை பூஜைகளின் இறுதியாக 6.05 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்து அதை கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் சென்று காலை 6:22 மணிக்கு புனித நீர் விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிர்ந்தது.
அதன் பின்னர் ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதிலுமிருந்தும், "கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?" என்ற வரிகளை நினைவு படுத்துவதை போல இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை கண்டுகளிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பிற்காக 6,100 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.