வரலட்சுமி விரதம் 2025: சிறப்புகள், வழிபாட்டு நேரம், வழிபாடு செய்யும் முறைகள் முழு விவரங்களுடன்

By News Dsk

வரலட்சுமி விரதம் (Varalakshmi Vratham) 2025: செல்வம், பெருமை, குழந்தை பேறு, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் ஆகியவற்றிற்கு அதிபதியான மஹாலக்ஷ்மியை நினைந்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் உன்னத திருநாளே இந்த வரலட்சுமி பண்டிகை ஆகும். இந்த விரதம் மற்றும் வழிபாட்டின் மூலம் திருமகளின் சகல அருளையும் பெறலாம் என்பது இந்து தர்ம நம்பிக்கை. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் விதம், நேரம் மற்றும் வழிபாட்டு முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

பொதுவாக வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படும் ஒரு விரதம் ஆகும். இந்த வருடம் வரலட்சுமி விரதம் நாளை (08-08-2025) கடைபிடிக்கப்படுகிறது. நாளை பெளர்ணமியும் இணைந்து வருவது கூடுதல் விசேஷமாகிறது.

யாரெல்லாம் கடைபிடிக்கலாம்?:
திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நீடிக்கவேண்டி பூஜைகள் செய்து மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசி பெறுவார்கள். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டி விரதம் இருந்து வழிபடுவார்கள். ஆனால் பொதுவாக வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடித்து மகாலட்சுமியை வழிபடலாம்.

வழிபாட்டு முறை:
வரலட்சுமி விரதம் என்பது பொதுவாக 3 நாட்கள் வழிபட கூடிய ஒரு விரதமாகும்.

* முதல் நாள் (வியாழக்கிழமை): மஹாலட்சுமி-யை வீட்டிற்கு அழைத்தல் / பிரதிஷ்டை செய்தல் மற்றும் வழிபாடு,
* இரண்டாம் நாள் (வெள்ளிக்கிழமை): விரதமிருந்து மூன்று வேளையும் பூஜைகள் செய்து வழிபாடு.
* மூன்றாம் நாள் (சனிக்கிழமை): புனர்பூஜை செய்து வழிபாட்டை நிறைவு செய்தல்.

மூன்று நாட்கள் வழிபாடு செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் கீழே சொல்லியுள்ளவாறு வழிபாடு நடத்தலாம்.

வழிபாடு செய்யும் முறை:
வரலட்சுமி விரதம் கடைபிடிக்க விரும்புபவர்கள் அதிகாலையிலேயே குளித்து முடித்துவிட்டு விரதத்தை தொடங்கி விட வேண்டும். முடிந்தவரை ஒரு நாள் முழுவதும் எதுவும் அருந்தாமல் இருப்பது நலம்.

ஆகஸ்ட் 08-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை / மாலையில் வழிபாட்டிற்காக சொல்லப்பட்ட நேரத்தில் மகாலட்சுமியின் படத்திற்கு பூக்கள் சூட்டி, தீப தூப ஆராதனை காட்டி, தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி, நைவேத்தியம் படைத்து எளிமையாக அனுசரிக்கலாம்.

அல்லது மனையில் படம் வைத்தும், கலசம் அமைத்தும் வழிபட விரும்புபவர்கள் நல்ல நேரத்தில் வீட்டு வாசலில் அம்பாளின் படம் மற்றும் கலசத்தை வைத்து "தங்கள் வீட்டிற்கு வந்து வரமகாலட்சுமியாக எழுந்தருளி தங்களின் பூஜைகளை ஏற்றுக் கொண்டு மனம்குளிர்ந்து தங்கள் வீட்டில் அனைத்து வளங்களும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க அருள் புரியுமாறு வேண்டி" பூஜைகள் செய்து உள்ளே எடுத்து வந்து, பூஜைக்காக தயார் செய்து வைத்துள்ள மனையில் எழுந்தருள செய்ய வேண்டும்.

அடுத்தபடியாக முதலில் விநாயகரையும், பிறகு குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கி விட்டு வரலட்சுமி விரத வழிபாட்டினையம் பூஜைகளையும் தொடங்க வேண்டும். பூஜையின் போது அம்பாளுக்குரிய துதிகளை பாடி அர்ச்சனை செய்தும், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் என திருமகளுக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் சொல்லி பூஜைகள் செய்து வழிபடலாம்.

அம்பாளுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் / வெண் பொங்கல், இட்லி, வடை, சுண்டல், புளியோதரை, முறுக்கு, சுசியம், அப்பம், லட்டு, அதிரசம் என தங்களை முடிந்ததை படைக்கலாம். முடியாதவர்கள் எளிமையாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பருப்பு பாயசம் போன்ற எதாவது ஒன்றை படைத்தும் வழிபாடு செய்யலாம்.

வழிபாட்டிற்கும் அலங்காரத்திற்கும் தாமரை, அரளி, மரிக்கொழுந்து, மருவு, மல்லி, முல்லை போன்ற அம்பாளுக்கு விருப்பமான மலர்களை உபயோகிப்பது கூடுதல் விசேஷம்.

பூஜை செய்து வழிபாடு முடிந்த பிறகு பூஜையில் வைத்த நோம்பு கயிறு / தாலி கயிறை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து ஆசி பெற்றோ அல்லது கணவர் கையாலோ கட்டிக் கொள்ளலாம். பிறகு வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு யாராவது 3 சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், மல்லிகை பூ, வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, புடவை அல்லது ஜாக்கெட் துணி போன்ற பூஜையில் வைத்து பூஜித்த பொருட்கள் கொடுத்து அவர்களுக்கு விருந்தளித்து அனுப்பவேண்டும். அல்லது அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு இந்த மங்கல பொருட்களை கொண்டு சென்று கொடுக்கலாம்.

பிறகு அனைவருக்கும் உணவு பரிமாறி தானும் உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

புனர்பூஜை (09-08-2025, சனிக்கிழமை) செய்யும் முறை:
பூஜை முடிந்த பிறகு அந்த கலசம் மற்றும் படத்தை வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விட்டு விடவேண்டும். பின்பு அடுத்த நாள் (09-08-2025) சனிக்கிழமை காலை தீப தூபம் காட்டி நிறைவு செய்து பூஜை பூஜைக்கு பயன்படுத்திய பூக்கள், நைவேத்தியம் போன்றவற்றை அருகில் உள்ள நதிகளிலோ அல்லது நீர்நிலைகளிலோ விட்டுவிடலாம். முடியாதவர்கள் கால் படாத இடங்களில் கொட்டி விடலாம்.

கலசம் மற்றும் மனையில் வைத்து பூஜை செய்தவர்கள், மனையில் பயன்படுத்திய அரிசியை சமையல் அறையில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் கலந்து அதை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் கும்பிடலாம். கலசத்தில் நீர் நிரப்பி வழிபட்டவர்கள் அந்த கலச நீரை வீடு முழுவதும் தெளித்து விட்டு மீதமுள்ள தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விடலாம்.

பூஜை செய்வதற்கான நேரம்:
ஆகஸ்ட் 08-ம் தேதி (வெள்ளிக்கிழமை):
காலை: 9 மணி - 10.20 மணி வரை
மாலை: 6 மணிக்கு மேல்

ஆகஸ்ட் 09-ம் தேதி(சனிக்கிழமை) புனர்பூஜை செய்ய:
காலை: 07.40 மணி - 08.55 மணி வரை
காலை: 10.40 மணி - 12 மணி வரை

கலசம் வைக்க:
கலசம் தயாரிக்க உலோகங்களால் ஆன சிறிய குடம் அல்லது சொம்பு எடுத்துக்கொள்ளவும். அதை தூய்மைப்படுத்தி கலசத்தில் நல்ல தண்ணீர் நிரப்பி, அதற்குள் எலுமிச்சம் பழம், மஞ்சள் தூள், ஏலக்காய், வாசனை திரவிய பொடி, நாணயங்கள் உள்ளே போடவும். ஒரு மனைப்பலகையில் கோலமிட்டு அதன் மீது தலை வாழை இலை அல்லது தாம்பாலம் வைத்து அதன் மீது பச்சரிசி அல்லது நெல் பரப்பி அதற்கு மேல் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்திற்கு மேல் மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காய் வைத்துக் கொள்ள வேண்டும். அம்பாளின் முகம் இருந்தால் அதை வைத்து அலங்காரம் செய்து கொள்ளலாம். கலசத்திற்கு புது வஸ்திரம் அல்லது புடவை அல்லது ஜாக்கெட் துணி சுற்றி அலங்காரம் செய்து மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு தொடங்கலாம்.

வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்கள்:
* சிறிய வாழைக்கன்று - 2
* மாவிலை தோரணம் மற்றும் கலசத்திற்கு.
* முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் அலங்காரத்தை ரசிக்க)
* பூ மாலை - அலங்காரத்திற்கு
* கலச சொம்பு - 1
* தேங்காய் (பூஜைக்கு மற்றும் கலசத்தில் அம்மன் வைக்க)
* தாழம்பூ / தாமரை / அரளி / மரிக்கொழுந்து, / மருவு / மல்லி / முல்லை - விருப்பமான அளவு
* வாழை இலை (அரிசியை பரப்பி கலசம் வைக்க மற்றும் படையல் வைக்க)
* ரவிக்கை துண்டு (அம்மனுக்கு வைக்க / மற்றும் சுமங்கலிகளுக்கு கொடுக்க)
* திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி
* மஞ்சள், சந்தனம், குங்குமம், அட்சதை, ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
* தேங்காய், வாழை பழம், வெற்றிலை, பாக்கு
* மஞ்சள் சரடு, பூ, பால்.

வரலட்சுமி விரத பூஜை நைவேத்தியம்:
சர்க்கரை பொங்கல் / வெண் பொங்கல், இட்லி, வடை, சுண்டல், புளியோதரை, முறுக்கு, சுசியம், அப்பம், லட்டு, அதிரசம், வெல்லப் பாயசம்

இந்த புனிதமான விரதத்தை கடைபிடித்து திருமகளின் சகல அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோமாக !!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE