ஸ்ரீவில்லிப்புத்தூர்: பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமான ஆழ்வாரான பெரியாழ்வாரின் மகளாக பிறந்து வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பெருமாளின் மீது திருப்பாவை பாடி, பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்தார் என்பது வரலாறு.
அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த இந்த மார்கழி நோன்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாடல்கள் பாடி மிக விமரிசையாக அனுசரிக்கப்படும்.
மார்கழி மாதத்தின் முதல் நாளான இன்று (டிச. 16) காலை 10 மணிக்கு ஆண்டாளுக்கு தங்க இலைகளால், திருப்பாவை பாடல்கள் நெய்யப்பட்ட 18 கஜம் திருப்பாவை பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
மேலும் தினசரி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவை கோஷ்டியும் நடைபெறும்.
இது தவிர மார்கழி மாதத்தில் பச்சை பரப்புதல், பகல்பத்து, ராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம், கூடாரவல்லி உற்சவம் என ஆண்டாளுக்கு பல்வேறு உற்சவங்களும் நடைபெறும்.
ஆண்டாள் திருப்பாவை 1:
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: இன்று மார்கழியில் முழு நிலா ஒளி வீசும் நல்ல நாள். சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளம் மிக்க சிறுமிகளே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் வேலையை செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.