ஆண்டாள் திருப்பாவை 2:
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!
பொருள்: இவ்வுலகில் வாழும் மனிதர்களே!, இவ்வுலகில் இருந்து விடுபட்டு பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்கு நாமும், நம் பாவையை வணங்கி விரதமிருக்க இந்த வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணாமலும், பால் குடிக்கக்காமலும், அதிகாலையே நீராடி, கண்ணில் மை தீட்டாது, மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம் என்பதால் அதை கூந்தலில் சூடாமலும், தீய செயல்களை மனதாலும் நினையாது, தீய சொற்களை மற்றவர்களிடம் பேசாது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாராமல் மற்றவர்களுக்கு அவர்கள் போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு தான, தர்மங்களை விரும்பி செய்வோமாக பாவையே.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து, இதன்படி வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.