ஆண்டாள் திருப்பாவை 3:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!.!
பொருள்: வாமன அவதாரத்தில் மூன்று அடிகளாலால் இந்த உலகத்தையே அளந்த உத்தமனனான நம் பரந்தாமன் சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம் வாருங்கள். உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து ஓங்கி வளர்ந்துள்ள செந்நெல் பயிர் வயல்களில், அதற்கு இடையே கயன்மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடும். நீர் நிலைகளில் பூத்துக் குலுங்கும் குவளை மலர்களை வண்டினங்கள் வந்து அமர்ந்து தேன் பருகி கண் அயர்ந்து தூங்கும். கேட்கும் நேரத்தில் குடங்களை பாலால் நிறைத்து விடும் வள்ளல்கள் நம் பசுக்கள். இப்படிப்பட்ட அழிவற்ற செல்வங்கள் எங்கும் நிறைய இந்த பாவை நோன்பை நாமும் கடைபிடிக்க நீராட செல்வோம் வாருங்கள் தோழிகளே!!! என்று தன் தோழிகளை நீராட அழைக்கிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.