ஆண்டாள் திருப்பாவை 7:
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்!
பொருள்: ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன் குருவிகள் தங்கள் துணையுடன் கீச்சிடும் ஒலி உனக்கு கேட்கவில்லையா? கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் ஒன்றோடொன்று மோதி ஒலியெழுப்ப, வாசனையுடைய கூந்தலை கொண்ட ஆயர் குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையுமா உன் காதுகளுக்கு கேட்கவில்லை? எல்லோரையும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாராயணான கேசவனை நாங்கள் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் இன்னும் நீ உறங்கிக் கிடக்கிறாயோ? நாட்டையே ஆளுகின்ற சக்தி கொண்டவளே! பாவை நோன்புக்கு செல்ல சீக்கிரம் உன் வீட்டுக்கதவைத் திற என்று ஆண்டாள் தன் தோழிகளை அழைக்கிறாள்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.