ஆண்டாள் திருப்பாவை 8:
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!!
பொருள்: கீழ் வானம் வெளுத்து எருமை மாடுகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களை சென்றுவிட்டது. நீராடுவதற்காக வந்திருக்கும் எல்லாப் பெண்களையும் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறேன். மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே! சீக்கிரம் எழுந்து வா!.... "கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும் தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் சென்று வழிபட்டால் அவன் நமக்கு என்னவேண்டும் என்பதை ஆராய்ந்து அருள்மழை பொழிவான்" என்று ஆண்டாள் தன் தோழியை எழுப்புகிறாள்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.