ஆண்டாள் திருப்பாவை பாடல் 13 (மார்கழி 13-ம் நாள்): கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாட!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 13:

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!

பொருள்: "சிறிய புற்களைக் கிள்ளுவதைப்போல பறவை வடிவம் கொண்டு வந்த பேரசுரனான பகாசுரனின் வாயைப் பிளந்து அழித்த நம் நாராயணனின் புகழைப் பாட நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். கீழ்வானில் வியாழன் மறைந்து வெள்ளி முளைத்து விட்டது. பறவைகள் சந்தோசத்தில் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய அழகிய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் நீராட வராமல் என்ன செய்கிறாய்? கண்ணனை கொண்டாட சிறந்த இந்த பாவை நோன்பு நன்னாளை அபகரிக்க நினைக்கும் அந்த தூக்கத்தை தவித்து சீக்கிரம் எழுந்து எங்களுடன் நீராட வா!..." என்று ஆண்டாள் தன் தோழியை எழுப்புகிறாள்.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE