ஆண்டாள் திருப்பாவை 15:
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்!
பொருள்: ஒரு வழியாக தன் தோழியை எழுப்பிய ஆண்டாள், அவ்விருவருக்குமான உரையாடலை இப்பாடலில் எடுத்துரைக்கிறாள்.
"இளம் கிளி போன்றவளே, என்ன இது? இவ்வளவு பெண்கள் எழுந்து வந்த பின்பும் இவ்வளவு நேரம் நீ உறங்குகின்றாயே என்று கேட்க, அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள் இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள் எனக்கு உங்களைப்போல் பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்கிறாள். அப்பொழுது தோழிகள் அடியே! நாங்களெல்லாம் வந்து உனக்காக காத்திருக்க அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கேட்க, அதற்கு அவள் நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். அதற்கு தோழிகள் அவளிடம், வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ எத்தனை பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நீயே வெளியே வந்து இங்கிருப்போரை பார்!" என்று உடனே பாவை நோன்புக்கு கிளம்புமாறு தன் தோழியிடம் கூறுகின்றனர்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.