ஆண்டாள் திருப்பாவை 17:
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்!
பொருள்: ஆடைகளையும், குடிக்க நீரையும், உண்ண உணவும் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே எழுந்திருங்கள்!, கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்று இன்முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து தன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்திருக்கும் செல்வத் திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.