ஆண்டாள் திருப்பாவை 18:
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
பொருள்: திருப்பாவை முதல் 17 பாடல்களில் பாவை நோன்புக்கு தோழிகள் உள்ளிட்ட அனைவரையும் எழுப்பிய ஆண்டாள், இப்பொழுது கண்ணணின் வீட்டிற்கே சென்று கண்ணனை துயில் எழுப்புவதற்காக கண்ணனின் மனைவி நப்பினையை முதலில் எழுப்புகிறார் ஆண்டாள் நாச்சியார்.
"மதம் கொண்ட யானையை அடக்கும் தோள் வலிமை கொண்ட நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனையான கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் சப்தம் நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் ஒலி எழுப்ப துவங்கி விட்டன. பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் இங்கே வந்துள்ளோம். அழகிய வளையல்கள் ஒலி எழுப்ப உன் செந்தாமரைக் கையால் கதவை திறந்து எங்கள் உள்ளம் குளிர்விப்பாயாக!"
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.