ஆண்டாள் திருப்பாவை 24:
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!
பொருள்: "மகாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தினை அழித்து, இவ்வுலகை மூன்றடிகளால் அளந்தவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம்.
இலங்கைக்கு சென்று சீதையை மீட்டு இராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு வணக்கம்.
உன்னை கொல்ல சக்கர வடிவில் வந்த அசுரன் சகடனனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் மாற்றி, அவனை விளாமர வடிவில் இருந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால் வீரக்கழல்களைப் போற்றுகிறேன்!
கோவர்த்தனகிரி குன்றை குடையாக்கி இந்திரன் அனுப்பிய பெருமழையிலிருந்து ஆயர்குலத்தவரை காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறேன்.
எத்தகைய பகைவர்களையும் வெல்லும் வல்லமை கொண்ட உன் கையிலுள்ள வேலினைப் போற்றுகிறேன்!
இவ்வாறெல்லாம் நீ புரிந்த வீரச்செயல்களை போற்றிப் பாடி மகிழ்ந்து, இந்த மார்கழி நோன்பினை நோற்று உன்னைக் காண வந்துள்ளோம்! எங்களிடம் இரக்கம் காட்டி அருள்புரிந்து, எங்களுக்கு நோன்பின் பலனைத் தருவாயாக!"
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.