ஆண்டாள் திருப்பாவை பாடல் 28 (மார்கழி 28 - ம் நாள்): குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 28:

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!

பொருள்: "நாங்கள், கறவை மாடுகள் மேய்ச்சல் தொழிலை செய்து, அந்த மாடுகள் தரும் பாலினால் வரும் வருமானத்தில் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து சாப்பிட்டு வளரும் ஆயர்குலத்தில் பிறந்தவர்கள். எங்களுக்கு உலகஞானம் போன்ற எந்த பெரிய அறிவும் கிடையாது. ஆனால் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனாகிய உன்னை போற்றி பணிந்தால் மிகப்பெரிய புண்ணியம் சேரும் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியும். நமக்குள் இருக்கும் உறவை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. அந்த உறவின் பேரன்பின் காரணமாக உன்னை கண்ணா, மணிவண்ணா போன்ற சிறுசிறு பெயர் சொல்லி ஒருமையில் அழைத்திருப்போம். அதற்கும் கோபித்துக் கொள்ளாத எங்கள் இறைவா! இந்த பாவை நோன்பை ஏற்று எங்களுக்கு அருள்வாயாக!"

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE