• 01:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

மாறுகிறதா கூட்டணி கணக்குகள்? 2026 தேர்தலில் காத்திருக்கும் மிகப்பெரிய ஆச்சரியங்கள்!

big-surprises-await-in-the-2026-elections
Latest News

இந்த ஆண்டு(2026) ஏப்ரல் / மே மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்தல்களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்றைய அரசியல் சூழலில் நிலவும் கூட்டணிகள் மற்றும் தேர்தல் கணிப்புகள் குறித்த பார்வை இதோ,

தமிழ்நாடு தேர்தல் 2026: கூட்டணி மோதல்களும் தேர்தல் கணிப்புகளும்

ஒவ்வொரு தேர்தலின் போதும் புதிதாக ஒரு கட்சி உருவெடுத்தாலும், தமிழக அரசியலில் பன்னெடுங்காலமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு துருவங்களுக்கு இடையேதான் போட்டி இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த 2026-ல், தமிழக வெற்றிக் கழகம் (TVK) வருகையாலும், நாம் தமிழர் கட்சி (NTK) - யின் வளர்ச்சி காரணமாகவும் தேர்தல் களம் பலமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளதாக பலரும் கருதுகின்றனர்.

அதன்படி, தற்போது தமிழக அரசியல் களம் நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறது. அதன்படி, தற்போதைய கூட்டணிகள் நிலவரம்,

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி:

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ், வி.சி.க, இடதுசாரிகள் (CPI, CPI(M)), ம.தி.மு.க, மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் நீடிக்கின்றன. அண்மைக் காலமாக "ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என்ற கோரிக்கைகள் கூட்டணிக்கட்சிகளிடம் எழுந்தாலும் திமுக மறுத்தே வருகிறது. மேலும் இது கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூட்டணி வலுவாக இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA):

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பா.ஜ.க மீண்டும் கைகோர்த்துள்ளது. இவர்களுடன் பா.ம.க (அன்புமணி), டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க, பாரிவேந்தரின் ஐஜேகே (IJK), ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்(TMK), ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி (NJP), எம். ஜெகன் மூர்த்தி-யின் புரட்சி பாரதம் கட்சி(PBK) ஆகியவை இணைந்த ஒரு பலமான கூட்டணியாக உருவெடுத்துள்ளது. பா.ஜ.க வின் "டபுள் என்ஜின் ஆட்சி" போன்ற முழக்கங்கள் இருந்தாலும் இது கூட்டணிக்குள் எந்த புகைச்சலையும் ஏற்படுத்தவில்லை.

தமிழக வெற்றிக் கழகம் (TVK):

நடிகர் விஜய் தொடங்கியுள்ள த.வெ.க, இந்தத் தேர்தலில் ஒரு முக்கியமான போட்டியை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது. கூட்டணிகளுக்கு முக்கியத்துவம், ஆட்சில் பங்கு போன்ற சலுகை அறிவிப்புகளை வெளியிட்டாலும் சரியான கூட்டணி அமையாததால் தனித்துப் போட்டியிடும் நிலையில் உள்ளது. ஆனாலும் சில சிறிய கட்சிகளுடன் புரிந்துணர்வு வைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி (NTK):

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போல "தனித்துப் போட்டி" என்ற கொள்கையில் உறுதியாகவும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்கியும் உள்ளது.

மேலும், திரு ஓ.பன்னீர்செல்வம், திருமதி. சசிகலா மற்றும் தேமுதிக உள்ளிட்டவர்களின் கூட்டணி நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும், அது கூட்டணிகளில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் கணிப்புகள் (Predictions):

அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்கள், பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் மற்றும் தற்போதைய தரவுகளின் அடிப்படையில் 2026 தேர்தல் கட்சிகளுக்கு சவால்களாக கீழ்கண்ட சில முக்கிய காரணிகள் கருதப்படுகிறது.

வெற்றி வாய்ப்பு: தற்போதைய கருத்துக்கணிப்புகள் அடிப்படையில் தி.மு.க கூட்டணி முன்னிலையில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அ.தி.மு.க-பா.ஜ.க தலைமையிலான பலமான கூட்டணி கடும் போட்டியைத் தருவதால் திமுக உள்பட அனைத்து கட்சிகளுக்கும் கடுமையான போட்டியை கொடுத்துள்ளது.

விஜய்யின் தாக்கம்: த.வெ.க சுமார் 10 முதல் 15% வாக்கு சதவீதத்தைப் பெற்று, முன்னணி கட்சிகளின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

முக்கிய பிரச்சனைகள்: ஆட்சிக்கு எதிரான மனநிலை (Anti-incumbency), வேலைவாய்ப்பு மற்றும் குடி மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்றவை தேர்தலில் முக்கிய கருப்பொருளாக இருக்கும்.

வாக்குச் சிதறல்: பலமுனைப் போட்டியால் வாக்குகள் சிதறி, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்படும் சூழல் ஏற்படலாம்.

இது தவிர,

ஆளும் கட்சியை பொறுத்தவரையில் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சிக்குப் பின் ஏற்படும் விமர்சனங்களைச் சமாளித்து, தனது வாக்கு வங்கி மற்றும் ஆட்சியை தக்கவைப்பதும், வெற்றிபெறுவதும் தி.மு.க-விற்கு களத்தில் பெரும் சவாலாக இருக்கும்.

எதிர் கட்சியை பொறுத்தவரையில் பிளவுபட்டிருந்த அ.தி.மு.க-பா.ஜ.க தொண்டர்களை ஒருங்கிணைத்து வாக்குகளாக மாற்றுவதும், சிறுபான்மை மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் எதிர்மறை எண்ணத்தை மாற்றுவதும் NDA கூட்டணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

முதல்முறையாகக் களம் காணும் விஜய்-யை பொறுத்தவரையில் 10-15% வாக்கு சதவீதத்தைப் பெறுவார் என்று ஆருடம் சொல்லப்பட்டாலும் அடிமட்ட அளவில் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதும் அவசியமாகிறது.

முடிவாக, 2026 தேர்தல் என்பது அடுத்த 5-வருடங்களுக்கு யார் ஆட்சி செய்யப்போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் மட்டுமே. அதனால் கட்சிகள் வெற்றியை மட்டுமே பிரதானமாக கொண்டிருந்தாலும் அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டை ஊழலற்ற, நேர்மையான, போதையில்லாத, தொழில், வேலைவாய்ப்பு, விவசாயம் சிறந்த மாநிலமாக உருமாற்ற சிறந்த தேர்தல் அறிக்கைகளுக்கும், கட்சிகள் அதற்கான முன்னெடுப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரவேண்டும்; அதேபோல மக்களும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்பதே அனைவரின் முக்கியமான எதிர்பார்ப்பு.

SCROLL TO NEXT ARTICLE