நீலகிரி: கனமழை எச்சரிக்கை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத் தலங்களும் மூடல்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கையும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 6, 7-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#rain #school leave #red alert #Nilgiris #ooty