புதுடெல்லி: சமீப காலமாக அதிகரித்து வரும் உடலுக்கு கேடு விளைவிக்கும் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் குறைவான உடல் செயல்பாடு போன்ற காரணங்களால் குழந்தைகள் உள்பட அனைவரும் உடல் பருமன் பாதிப்புக்குளாகின்றனர். குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் பருமன் கூட அதிக வாய்ப்புள்ளது.
நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டு இறுதிக்குள் 44.9 கோடியை தாண்டும் எனவும் அதன் மூலம் அதிக உடல் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்புப் பலகையில் தினமும் உண்ணும் சிற்றுண்டி/நொறுக்குத்தீனி போன்ற உணவுகளில் எந்த அளவுக்கு கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு இருக்கிறது என்பதை தெளிவாக குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையில்லாத உணவை தவிர்ப்பதன் மூலமாக உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது. குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகள் உடலுக்கு மிகவும் தீங்கானது என்று கூறப்படுகிறது.
இதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் ஆம்லே குறிப்பிடும் போது, சிகரெட் மற்றும் மது பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இருப்பதை போன்று சமோசா, ஜிலேபி போன்ற பாக்கெட்டுகளில் கூட விரைவில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறலாம் என்றார்.