உலக சிட்டுக்குருவிகள் தினம்: இயற்கையின் சிறிய தூதர்கள்

அண்மைக் காலமாக குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை காரணமாகவும், தமது வாழ்வுக்காக நாள்தோறும் அவை சந்திக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த உலக சிட்டுக்குருவிகள் தினம் ஆண்டு தோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
அதன் படி, 2010 ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தினம் உலக சிட்டுக்குருவிகள் நாள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தினம் உலகெங்கும் இந்த உலக சிட்டுக்குருவிகள் தினம் (World House Sparrow Day - WHSD) கொண்டாடப்படுகிறது. மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" (We will save our House Sparrows) என்பதாகும்.
பணிவான குருவி:
சிட்டுக்குருவி எளிமையான தோற்றமும், செயலில் அடக்கமானது. அதன் இறகுகள் பொதுவாக பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பூச்சிகள் மற்றும் சிதறிய விதைகளை உண்கின்றன. இறுதியாக பெரிய விலங்குகளுக்கு இவை இரையாக மாறுகிறது.
அழியும் சிட்டுக்குருவிகள்:
மனிதனின் அன்றாட பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள், நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் சிட்டுக்குருவி எனும் ஒரு இனமே முற்றிலும் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த அழிவை 1990-ஆண்டுகளிலேயே அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்த சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முக்கியமான சில,
1. வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
2. எரி வாயுக்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
3. வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
4. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைக்கிறது. அவை முட்டையிட்டாலும் கருவளர்ச்சி அடையாமல் அழிந்து அந்த இனமே அழிவுக்கு வந்துள்ளது.
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு முயற்சிகள்:
கூடு பெட்டிகள்: பெரு நகரங்களில் உள்ள நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கும் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வீடுகளில் செயற்கை கூடு பெட்டிகளை மக்கள் நிறுவியுள்ளனர்.
பிரச்சாரம்: குறைந்து வரும் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு அமைப்புகள் "நமது சிட்டுக்குருவிகள் காப்போம்" என்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் கல்வி: பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிட்டுக்குருவிகள் குறித்த பாதுகாப்பு பாடங்களை உள்ளடக்கி, சிறு வயதிலிருந்தே இந்தப் பறவைகளின் முக்கியத்துவத்தை விதைக்கின்றன.
பொதுத் தோட்டங்கள்: சில நகரங்கள் பறவைகளுக்கு ஏற்ற பொது தோட்டங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். அவற்றில் தண்ணீர் குளியல் மற்றும் பறவை தீவனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, உலக சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் உலகிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் ஒரு சிறிய பறவைக்கு நாம் அஞ்சலி மட்டும் செலுத்தாமல், ஒவ்வொரு உயிரினமும் இந்த உலகத்திற்கு ஒவ்வொரு பங்களிப்பை தருகிறது என்பதையும் உணர்ந்து அதன் வாழ்க்கைக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோமாக !!!.
Tags:
#World Sparrow Day #உலக சிட்டுக்குருவிகள் தினம்