5 ஆண்டுகளில் ரூ 400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர்

உத்தர பிரதேசம்: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை மூலம் அரசுக்கு ரூ 400 கோடி வரி வருமானம் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கியது முதல் நகரின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 மடங்குக்கும் அதிகமான பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. மிகப்பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக அயோத்தி உருவெடுத்திருக்கிறது. அயோத்தி நகரம் மட்டுமன்றி அரசுக்கும் நிறைவான வருவாய் கிடைத்திருக்கிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் கோயிலுக்கு வருகை தந்தனர். அறக்கட்டளையின் வரவு, செலவு விவரங்களை அவர்கள் சரிபார்த்தனர். அவர்கள் ஆய்வு செய்து அண்மையில் விரிவான அறிக்கையை அளித்தனர்.
இதன்படி அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி முதல் 2025ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை ரூ.400 கோடியை வரியாக செலுத்தி உள்ளோம். இதில் ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரி ஆகும். ரூ.130 கோடி இதர வகை வரிகள் ஆகும்.
கடந்த ஓராண்டில் மட்டும் அயோத்தி ராமரை 16 கோடி பக்தர்கள் தரிசித்துள்ளனர். உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றபோது நாள்தோறும் சுமார் 4.5 லட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். மகா கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் மட்டும் 1.25 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
Tags:
#அயோத்தி ராமர் கோயில் #அயோத்தி #Ayodhya Ram Temple #taxes #GST