ஆடிப்பெருக்கு வரலாறு: ஆடி-18 அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை!!!

"ஆடிப்பட்டம் தேடி விதை" - என்பது பழமொழி. பங்குனி கடைசி முதல் ஆனி மாதம் முடிய வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது. வெயில் காலம் முடிந்து குளிர்ந்த காற்றும், மழையும் என விவசாயத்திற்கு ஏற்ற பருவநிலை தொடங்கும் மாதமே இந்த ஆடி.
ஆடிப்பெருக்கு வரலாறு:
பூமி தாயை குளிர்வித்து விவசாயம் செழிக்க இயற்கை முதல் மழையைக் கொண்டு வரும் இந்த ஆடி மாதத்தில் ஆறுகளில் புது வெள்ளம் பாய்ந்து, புதிய விளைச்சலுக்குக் ஏதுவாக காலமாக இருக்கும். நம் முன்னோர்களின் பிரதான தொழில் விவசாயம் என்பதாலும், இந்த ஆடி மாதத்தில் தான் விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளும் துவங்கப்படும் என்பதாலும் இந்த ஆடி மாதத்தில் விவசாயம் தவிர மற்ற எந்த சுப காரியங்களும் செய்ய மாட்டார்கள். எனவே தான் விவசாயிகள் ஆற்றங்கரைகளில் புதுவெள்ள நீரை சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்று தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர்.
பொதுவாகவே "பெருக்கு" என்பதற்கு "எண்ணிக்கை மிகுதல்", "மடங்காக்கு", "பெரிது ஆகு", "அதிகம் ஆகு", "பெருகுதல்", "பெருகல்" என்ற பல பொருள்களும் பொதுவாக "வளர்ச்சி" என்பதையே குறிக்கிறது. ஆக இந்த நாளில் எதை செய்தாலும் அது பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கையில் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
அனைத்து விசேஷங்களும் நாள், நட்சத்திரம், திதி போன்ற பஞ்சாங்க கணிப்பின் அடிப்படையில் மட்டுமே கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆடி 18 மட்டும் 18 என்ற எண்ணின் அடிப்படையாக கொண்டாடப்படுவதற்கு பல காரணங்களும் விளக்கங்களும் இந்த நவீன காலத்தில் சொல்லப்பட்டாலும் அதன் மூலக்கரு என்பது விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான ஒரே நாளில் நீர்நிலைகளை வணங்கி தங்கள் விவசாய பணிகளை தொடங்க வேண்டும் என்பதே பிரதானமான ஒன்றாகும். இதேபோலத் தான் அறுவடை முடிந்து நம் விவசாயத்திற்கு உதவியாக இருந்த சூரியன் மற்றும் மாடு போன்றவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தை-1 உள்ளது.
அப்படியாக விவசாயம் சார்ந்து கொண்டாடப்பட்ட இந்த திருவிழா தற்போது பரிணாம வளர்ச்சி பெற்று அனைத்து தரப்பு மக்களும் தங்கள் தொழில் சார்ந்த தொடக்கமாக கொண்டாட துவங்கி விட்டனர். எது எப்படியாயினும், கொண்டாட்டம் என்பது நம் மனதை செழுமைப்படுத்தி புது உற்சாகத்தை செலுத்தி நம் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் பெருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
அதனால் தான் இந்த நாளில் குறிப்பாக திருமணமான புதுமண தம்பதிகள் தங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் அமைய வேண்டி, ஆற்றில் நீர் பெருகி வருவதை போல் தங்களின் வாழ்க்கையில் சர்வ வளங்களும், வம்சம் பெருகி குடும்பம் பயிர்களை போல தழைத்து வளர வேண்டும் என்று ஆற்றங்கரைக்கு சென்று அங்கு படையலிட்டு தீப தூப ஆராதனைகளுடன் வழிபாடு செய்வது வழக்கம். வசதி படைத்தவர்கள் நகை முதலான மங்கலப்பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இதை கருதுகின்றனர்.
ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறை:
* முடிந்தவர்கள் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று படையல் போட்டு விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடத்தவேண்டும்.
* முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் குளித்துவிட்டு தங்களால் முடிந்த நைவேத்தியம் செய்து படையலிட்டு கங்கை, காவிரி நதிகளை மனதில் நினைத்து விவசாயம் தழைத்து நாடு செழிக்க வேண்டி பூஜைகள் செய்யவேண்டும். மேலும் நம் முன்னோர்களுக்கு படையலிட்டும் வழிபாடு நடத்தலாம்.
Tags:
#ஆடிப்பெருக்கு #Aadi Peruku #ஆடி 18 #ஆடி நோன்பு #ஆடிப்பெருக்கு வரலாறு