• 04:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

Thaipusam 2025 | தைப்பூசம் 2025 - சிறப்புகளும் விரதம் இருக்கும் வழி முறைகளும்!

thaipusam-2025-special-features-and-ways-to-observe-the-fast
Spiritual

தை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் ஒன்று கூடி வரும் நாளையே தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் 29-ம் தேதி (பிப்ரவரி 11) தைப்பூசம் வருகிறது. தை மாதம் 29-ம் தேதி காலையில் தான் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அதனால் அன்றைய தினமே பூஜைக்கு உகந்தது.

முருகப் பெருமான், ஞானப் பழத்தை பெற முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தன் தாய்-தந்தையிடம் கோபம் கொண்டு பழநி மலையில் அமர்ந்த தினமாக தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது என்றும் அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கிய நாள் என்றும் பலவிதமாக இந்த நாளுக்கு சிறப்புகளை சொல்வார்கள்.

முருக பக்தர்களால் மிக விசேஷமாக கொண்டாடப்படும் விழாவாக தைப்பூசம் உள்ளது. இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியர்கள் அதிகம் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூச தினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

தைப்பூசம் விரதம்:

முருகப் பெருமானுக்கு 48 நாட்கள் தைப்பூச விரதம் இருப்பது உயர்ந்த பலனை தரும் என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். வாழ்க்கையை மட்டுமன்றி தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டதாக இந்த விரதம் பார்க்கப்படுகிறது. 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாட்கள் / 9 நாட்கள் / 7 நாட்கள் / தைப்பூச நாள் மட்டும் என தங்கள் வசதிக்கேட்ப விரதம் அனுசரித்து முருகனை மனதார வழிபாடு செய்ய, முருகப் பெருமானின் அருளை முழுமையாகப் பெற முடியும் என்பது தின்னம்.

தைப்பூசம் விரதம் அனுசரிக்கும் முறை:

விரதங்களிலேயே மிகவும் எளிய விரதம் இந்த தைப்பூச விரதமே.

* வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டு, தினமும் காலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும்.

* விரதம் இருப்பவர்கள் முடிந்தால் ஒரு வேளை உணவை தவிர்த்து விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் மூன்று வேளையும் எளிய உணவையோ / பழங்களையோ மட்டும் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம்.

* தினமும் ஒரு வேளையாவது கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் செல்லலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக முருகப் பெருமானுக்கு மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வைத்து பூஜை செய்து முருகனின் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாடி விரதம் கடைபிடிக்கலாம்.

* எதுவும் தெரியாதவர்கள் நெற்றியில் திருநீறு வைத்து, ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை மட்டும் மூன்று வேலையும் சொல்லி விரதம் இருக்கலாம்.

* கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல், யாரிடமும் கோபம் கொள்ளாமல் இருந்து விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

* பெண்கள் மாதவிடாய் காலத்திலும் விரதத்தை தொடரலாம்.

* கடைசியாக தைப்பூசம் அன்று வீட்டில் விளக்கேற்றி வைத்து, முருகப் பெருமானுக்கு ஏதாவது நைவேத்தியம் படைத்து முருகனுக்கு நன்றி தெரிவித்து விரதத்தை முடிக்கலாம். முடிந்தவர்கள் எதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டும் வரலாம்.

இவ்வாறு இந்த விரதத்தை கடைபிடிப்பதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்க பெறுவதுடன் தீய சக்திகள் நம்மை அண்டாது. இதனால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

ஓம் சரவண பவாய நமக !!!

SCROLL TO NEXT ARTICLE