• 03:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

அகல் விளக்கு: பள்ளி மாணவிகளுக்கான புதிய திட்டம் - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

akal-vilakku-new-scheme-for-school-girls
Latest News

புதுக்கோட்டை: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவிகளின் மனம், உடல், சமூக ரீதியான பிரச்சனைகளிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் "அகல் விளக்கு" எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நேற்று (09-08-2025) பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்​.ரகுப​தி, சிவ.வீ.மெய்​ய​நாதன்​ உள்​ளிட்​டோர்​ கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள "அகல் விளக்கு" எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சென்ற வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்,

இந்த அகல் விளக்கு திட்டத்தின் நோக்கம்:

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தற்போதைய டிஜிட்டல் காலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு சவால்களை இணையவழி கொடுமை (Cyberbullying), சமூக ஊடகங்கள் மூலம் சந்திக்கின்றனர். இதன் மூலம் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பிற இணையதள அபாயங்களில் இருந்து அவர்களை பாதுகாத்து, அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி எவ்வித இடையூறும் இன்றி தங்கள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதே இந்த 'அகல் விளக்கு' திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டம் செயல்படும் முறை:

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியைகள், மாணவிகள் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுக்கள் மூலமாக மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கப்படும். மேலும் இணையதளத்தை பாதுகாப்பாக கையாள்வது, மன நலனை பேணுவது மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்வது போன்றவற்றிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் மாணவிகளுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் அடங்கிய ஒரு கையேடும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த திட்ட தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "பெண் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. சமூக ஊடகங்களில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டு கவலைப்பட தேவையில்லை, அதிலிருந்து மீண்டு வர முடியும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோரும், ஆசிரியர்களும் கண்காணித்து தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்" என்று பேசினார்.

SCROLL TO NEXT ARTICLE