சென்னை: தமிழகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
இன்று (12.8.2025) தாயுமானவர் திட்டத்தை சென்னை - தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்து, திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின். மாநிலத்தில் உள்ள வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடனும் அவர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் காண்போம்.
பயனாளர்கள் எண்ணிக்கை:
இத்திட்டத்தின் மூலமாக சுமார் 34,809 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த,
* 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும்,
* 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும்,
என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 மக்கள் பயன் பெறுவார்கள்.
செயல்படும் முறை மற்றும் நாட்கள்:
இத்திட்ட பயனாளிகள் மற்றும் அவர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு , கள அலுவலர்கள் ரேஷன் பொருட்கள் மற்றும் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயனாளர்களின் இல்லத்திற்கே நேரடியாக சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
திட்ட மதிப்பு என்ன?
வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் இத்திட்டத்தினால் அரசுக்கு சுமார் ரூபாய் 35.92 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குடிமக்களின் நலன் சார்ந்த இத்திட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவுவதுடன் அவர்களின் சிரமங்களை குறைக்கும் என்றும் அவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.