வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வாஷிங்டனில் சந்தித்து பேசுகிறார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் நேற்று முன்தினம் (15-08-2025) அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யை இன்று சந்தித்து பேசுகிறார் டிரம்ப். இந்த சந்திப்பில் உக்ரைன் அதிபருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரும் இணைந்து அதிபர் ட்ரம்பை சந்திப்பார்கள் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த சந்திப்பு பற்றி உக்ரைன் வட்டாரங்கள் கூறியதாவது: "உக்ரைனின் டோன்ஸ்க் பகுதியை சொந்தம் கொண்டாடும் ரஷ்யா அங்கு சுமார் 70% நிலப்பரப்பை கைப்பற்றி விட்டது. போரை நிறுத்த வேண்டுமானால் டோன்ஸ்க் பகுதியை முழுமையாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதற்கு ஈடாக ஈடாக ரஷ்யா-விடம் உள்ள மிகச் சிறிய பகுதியை உக்ரைனுக்கு வழங்கவும் ரஷ்யா அதிபர் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டோன்ஸ்க் பகுதி ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. இந்த பகுதியில் அரிய வகை இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அதனால் இந்த பகுதியை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் உக்ரைன் தரப்பில் தெரிவித்து வருகிறோம். உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் உள்ள நிலையில் இது குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் - உடனான சந்திப்பில் ஆலோசனை நடத்தப்படும்".