மகா சிவராத்திரி: சிவன் கோவில்களில் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்!!!

maha-shivaratri-special-worship-services-held-in-shiva-temples
Latest News

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப்புகழ் பெற்ற பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவில், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில், தஞ்சை அருள்மிகு பிரகதீஸ்வரர் கோவில் போன்ற பல கோவில்களில் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், விளவங்கோடு பகுதியில் 12 பழங்கால சிவன் கோவில்கள் உள்ளன. இங்கு மஹா சிவராத்திரியன்று பக்தர்கள் ஓடிச்சென்று வழிபடுவது தொன்றுதொட்டே வழிபாடும் வழக்கம். இது, சைவ - வைணவ சமயங்களை இணைக்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அதன்படி கையில் விசிறி, இடுப்பில் திருநீற்றுப்பையை கட்டிக்கொண்ட பக்தர்கள், 'கோபாலா... கோவிந்தா...' என, கோஷமிட்டபடி ஓடினர். முஞ்சிறையில் தொடங்கிய சிவாலய ஓட்டம், திருநட்டாலத்தில் நிறைவடைந்தது.

அதேபோல, பெரியகுளம் பகுதிகளில், கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர் அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

மேலும், கோவை, வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான முக்கிய பிரமுகர்களும், திரை பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் ஆதியோகி ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

SCROLL TO NEXT ARTICLE