இன்று மார்ச் 12, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
# ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - மாற்று வழித்தடங்களில் இறக்குமதி!
ஈரானால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது. மேலும் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 75% தற்போது மாற்று வழித்தடங்கள் மூலம் வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
# ஆகாஷ் வழக்கு: உயர் நீதிமன்றம் கேடு!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையில் நடந்து சென்றவர்களை அரிவாளால் வெட்டியதாக கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்பவர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஆகாஷின் தந்தை இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில், வழக்கை 60 நாளில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
# பரூக் அப்துல்லா மீது தாக்குதல்: ஒருவர் கைது!
ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பினார். இந்த நிகழ்விற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
# போர் முடிவு: ஈரான் மூன்று நிபந்தனைகள் விதிப்பு!
ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, ஈரானுக்கு உள்ள உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உறுதிமொழி வழங்க வேண்டும்.
# தவெக தலைவர் விஜய் திமுக அரசை கண்டித்து அறிக்கை!
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் "கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதல்வர் தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
# பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: வதந்தி !
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு என்றும் அதன் விலை கணிசமாக உயரக்கூடும் என்றும் வதந்தி பரவியதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளை நோக்கி படையெடுத்தனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எண்ணெய் நிறுவனங்கள், இது போன்ற தேவையற்ற வதந்திகளை பரப்பவேண்டாம் எனவும் மக்கள் இதை புறக்கணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
# தங்கம் விலை சரிவு!
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைவு
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.1,19,760-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனையாகிறது.
# IPL 2026: சிஎஸ்கே VS ராஜஸ்தான் 30-ம் தேதி மோதல்!
ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணி வரும் 30-ம் தேதி ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.