மார்ச் 24, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் கையிருப்பு: மக்களவையில் பிரதமர் மோடி தகவல்!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும் நாடு முழுவதும் பெட்ரோல், சமையல் காஸ் தடையின்றி விநியோகம் செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்கப்படும் என்றும் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்: 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!
மத்திய கிழக்கு பகைமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
NDA தொகுதிப் பங்கீடு நிறைவு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். மீதியுள்ள 178 இடங்களில் அதிமுக, இதர கட்சிகளுடன் களமிறங்குகின்றது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: போலீசார் 9 பேரும் குற்றவாளிகள்!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
திமுக அணியில் மார்க்சிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள்!
மார்க்சிஸ்ட் கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளை வலியுறுத்தி வந்த நிலையில், 5 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க திமுக முன்வந்தது. இதனால் உடன்பாடு ஏற்படாமல் இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் குழுவினர் ஸ்டாலின் வேண்டுகோளினை ஏற்று 5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தனர். இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
தி.மு.க - வி.சி.க தொகுதி பங்கீடு: வி.சி.க. தீர்மானம்!
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ள நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது என்றும் 2028-ல் ஒரு ராஜ்யசபா இடம் கேட்பது எனவும் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அதிமுக அறிவிப்பு!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.