இன்றைய முக்கிய செய்திகள் (மார்ச் 26, 2026) #BREAKING #TAMILNEWS

today-march-26-2026-top-news-in-tamil
Latest News

மார்ச் 26, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் சீனா, ரஷ்யா, இந்தியா, இராக், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் எதிரி நாடுகள் மற்றும் அவர்களின் கூட்டாளி நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும் ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

---------------------------------

இஸ்ரேல் ராணுவத் தாக்குதல்: ஈரான் கடற்படைத் தளபதி மரணம்?

ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில், ஈரான் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து ஈரானின் மூத்த கடற்படைத் தளபதிகள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இது குறித்து ஈரான் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

---------------------------------

60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு: மத்திய அரசு விளக்கம்!

நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல், எல்பிஜி-க்கு எந்த பற்றாக்குறையும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும் பெட்ரோல், டீசல் விற்பனையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------

ஆந்திராவில் பேருந்து - லாரி விபத்து: 13 பேர் பலி, 25 பேர் காயம்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதியில், இன்று அதிகாலையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு
குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

--------------------------

மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் வழக்கில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் எனவும் உரிமையியல் வழக்கில் தீர்வு கிடைக்கும் வரை மாம்பழ சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம் “தேர்தல் நடைமுறை தொடங்கி விட்டதால் சின்னத்தை முடக்க முடியாது எனவும் இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றும் வாதிட்டார். இறுதியில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

---------------------------------

மேற்காசிய போர் பதற்ற நிலவரம்: முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை!

மேற்காசிய போர் பதற்ற நிலவரம் குறித்தும், போர்ச்சூழலில் மாநிலங்கள் தயாராக இருப்பது உள்ளிட்டவை குறித்தும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மார்ச் 27 ம் தேதி மாலை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

------------------------------

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்.1-ல் தேரோட்டம்!

திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.1-ம் தேதி நடைபெற உள்ளது.

SCROLL TO NEXT ARTICLE