இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு: இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்ததால், வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
----------------------------------
தரம் தாழ்ந்த பேச்சு: ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில், இந்தியா குறித்துக் குறிப்பிடும்போது சில சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். இது இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
----------------------------------
மேற்கு வங்க தேர்தல் வாக்குப்பதிவு: முதல் கட்ட தேர்தலில் 90%-ஐ கடந்த வாக்குப் பதிவு
மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்ததால், வாக்குப்பதிவு 90 சதவீதத்தை தாண்டியுள்ளது.
----------------------------------
தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு!
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்படலாம் என கோடக் பங்குகள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதை உறுதியாக மறுத்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இது போன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.
----------------------------------
இந்தியா - சீனா இடையே நேரடி விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் கரோனா பரவல் காரணமாக இந்தியா - சீனா நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது படிப்படியாக இரு நாடுகளுக்கிடையே நேரடி விமான போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஏர் சீனா நிறுவனம், பெய்ஜிங் - டெல்லி இடையிலான தனது விமான சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.
----------------------------------
இந்தியாவில் ரூ.2,800 கோடி முதலீடு: அமேசான் நிறுவனம் அறிவிப்பு!
அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் 35 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் ஒரு பகுதியாக, தற்போது ரூ.2,800 கோடி, தனது விநியோகக்கட்டமைப்பு மற்றும் ஊழியர்களின் நலன் சார்ந்த திட்டங்களை விரிவுபடுத்த முதலீடு செய்ய உள்ளதாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
----------------------------------
மும்பையை துவம்சம் செய்த சிஎஸ்கே: ஐபிஎல் 2026!
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற, ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.