இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
ஈரான் விதித்த நிபந்தனைகள் - பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை தகவல்!
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, அணு ஆயுத முயற்சியை கைவிடுதல் போன்ற அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து நேற்று ஈரான் தனது நிலைப்பாட்டை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியது. இந்நிலையில் ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்குமானால், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயார் என ஈரான் கூறி இருந்த நிலையில், இது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
----------------------------
5 மாநில தேர்தல் முடிந்தது: கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வெளியாகிறது!
அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழகத்திற்கு கடந்த 23-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் முடிந்தது. மேற்குவங்கத்தில் 23 ல் முதல் கட்டமாகவும், இன்று 2-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஆக இன்று மாலை 6 மணியுடன் 5 மாநில தேர்தல் முடிவுக்கு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகவுள்ளன.
----------------------------
ஆந்திராவில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீடு: கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கு அடிக்கல்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 இடங்களில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த ஏஐ மையம் 2028-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------------------
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: இன்று காலையில் தேரோட்டம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
----------------------------
பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி: ஐபிஎல் 2026!
ஐபிஎல் 2026 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை் பதிவு செய்துள்ளது. 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் தனது இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.