உலகம் முழுவதும் முதலீட்டுக்கு சிறந்த வழியாக கருதப்படும் தங்கம், இந்தியர்கள் வாழ்விலும், கலாசாரத்திலும் மிக முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட தங்கம் ஒவ்வொரு கால கட்டத்திலும் படிப்படியாக உயர்ந்துகொண்டே வந்துள்ளது. ஆனால் உச்சத்தின் உச்சமாக கடந்த 2025 ல் அனைவரும் அச்சப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் ரூ7,220/ 1gm என்று இருந்த நிலையில் ரூ 5,397 உயர்ந்து ஆண்டின் இறுதிநாளான நேற்று டிச 31-ல் ரூ13,106/gm என்றும் அதே போல வெள்ளி ரூ79,353/Kg என்ற விலை ரூ1,45,554 அதிகரித்து நேற்று ரூ2,29,159/Kg ஆக உள்ளது. சராசரியாக கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தங்கம் விலை சுமார் 75 சதவீதமும், வெள்ளி 184 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.
விலை உயர்வுக்கான சர்வதேச காரணங்கள்:
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, பல்வேறு நாடுகளில் நடக்கும் போர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர் உயர்வில் இருந்து வருகிறது.
ஒவ்வொரு நாடும் அமெரிக்க டாலருக்கு இணையான தங்கள் பணத்தின் மதிப்பு சரியும் போதும் அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள் மூலம் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரிப்பதும், சேமித்து வைப்பதும் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்புக்கு பிறகு உலக நாடுகள் மீது அவர் விதிக்கும் வரி மற்றும் பொருளாதார கொள்கைகள் காரணமாக உலகளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் டாலரின் மதிப்பு அதிகரிப்பு போன்றவை தங்கம் பாதுகாப்பான முதலீடு என்ற மனநிலையை உருவாகியுள்ளது.
விலை உயர்வுக்கான இந்திய காரணங்கள்:
உலகளவில் பல காரணங்கள் இருந்தாலும் இந்தியர்களை பொறுத்தவரை தங்கத்தை முதலீடு, ஆபரணம், சொத்து என அனைத்து வகையிலும் பயன்படுத்தி சேகரித்து வைக்கின்றனர்.
மேலும் தங்க நகைக் கடனை ஊக்குவிக்கும் வகையில் ஆர்பிஐ (RBI-Reserve Bank of India) தங்க நகைக்கு அதன் மதிப்பில் 75% வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 2.5 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும் என்று அறிவித்தது. இது நடுத்தர வகுப்பு மக்களுக்கும், விவசாயம் போன்ற அவசர தேவைக்கு கடன் வாங்குபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுவே வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறிய வங்கிகள் தங்க நகையின் மதிப்பில் 88% அளவுக்கு கடன் வழங்குகின்றன. இதனால் பொதுமக்கள் அதிகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகம் விரும்புகின்றனர்.
2025 - ல் கடந்து வந்த பாதை:
கடந்த 2025 தொடக்கத்தில் (ஜன. 1, 2025) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200 என்ற நிலையில் இருந்தது. அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை ஜன. 16-ஆம் தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120 என்ற அளவில் உயர்ந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து வரலாற்றில் முதல் முறையாக கடந்த பிப்.11-ம் தேதி சவரன் ரூ.64,000-ஐ கடந்தது. அது மேலும் உயர்ந்து பிப்ரவரி இறுதியில் சவரன் ரூ.64,560-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மார்ச் மாதத்தில் ரூ.66,400-க்கும் விற்பனையானது.
இனியாவது குறையுமா என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஏப்.12 ஆம் தேதி புதிய உச்சமாக ரூ70,160 என்றும் மே 8-ல் சவரன் ரூ.73,040 என்றும் புதிய உச்சங்களில் மிரட்டியது.

தினசரி செய்திகளில் தங்கம் விலை புதிய உச்சம் என்று சொல்லுமளவிற்கு நாள்தோறும் புதிய பரிமாணங்களை எடுத்த தங்கம் மே மாதம் அமெரிக்கா - சீனா இடையே பரஸ்பர வரி விதிப்பு பேச்சுவாா்த்தை முடிவினால் முதலீட்டாளர்கள் கண்களிலிருந்து தப்பித்து மே16-ல் ரூ70,000 -கு கீழ் சென்றது.
ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியான ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா மீதான அமெரிக்க அரசின் 50% கூடுதல் வரி விதிப்பு அமல் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டதன் மூலம் தங்கத்தின் விலையில் தொடர் ஏறு முகமாக இருந்தது. அதனால் செப். 6-ல் ரூ80,040, செப். 23-ல் ரூ85,120, அக். 7-ல் ரூ.89,600 என்று புதுப்புது உச்சத்தை அடைந்தது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பு மற்றும் அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, சர்வதேச போர் பதற்றம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் மீண்டும் அதிகரித்து அக். 8-ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. அது மேலும் வளர்ச்சியடைந்து அக்.16-ல் ரூ.95,200 என்றும் டிச.12-ல் ஒரே நாளில் அதிகபட்சமாக சவரனுக்கு ரூ.2,560 உயா்ந்து ரூ.98,960-க்கு விற்பனையானது.
இப்படியாக ஆட்டம் கண்ட தங்கத்தின் விலையானது டிச.15 ஆம் தேதி ரூ.1,00,120-ம் என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது மென்மேலும் உயர்ந்து ரூ.1,00,800-க்கு மேல் சென்றது. 2025-ம் ஆண்டின் நிறைவு நாளான நேற்று (டிச. 31, 2025) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,00,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை?
தங்கத்திற்கு சிறிதும் சளைக்காமல் வெள்ளியும் தங்கத்துடன் ஈடு கொடுத்து விலையேறியது. வருட தொடக்க ஜன 2025-ல் வெள்ளி ரூ79,353/Kg என்ற விலை தொடர்ந்து அதிகரித்து ரூ1,45,554 என்ற வளர்ச்சியுடன் நேற்று ரூ2,29,159/Kg ஆக உள்ளது.

மண்ணில் போட்டதும் பொன்னில் போட்டதும் வீணாகாது என்பது பழமொழி. அனைவருக்கும் மண்ணில் போட வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. குறைந்தது பொன்னிலாவது இந்த புத்தாண்டு முதல் மில்லி கிராம் தங்கமாகவோ அல்லது சிறு தொகையையோ கிடைக்கும் சமயங்களில் தங்கத்தில் முதலீடு செய்வோம். சிறுசிறு துளி தான் பெரு வெள்ளமாகும் !!!.