• 05:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

ஆண்டாள் திருப்பாவை 1: நாராயணனே நமக்கு பறை தருவான்!

andal-thirupavai-1-day-1
Spiritual

ஸ்ரீவில்​லிப்புத்​தூர்: பன்​னிரு ஆழ்​வார்​களில் மிக முக்கியமான ஆழ்வாரான பெரி​யாழ்​வாரின் மகளாக பிறந்து வளர்ந்த ஆண்டாள், மார்​கழி மாதத்​தில் பெருமாளின் மீது திருப்​பாவை பாடி, பாவை நோன்பு இருந்து ரெங்​கமன்​னாரை மணந்​தார் என்​பது வரலாறு.

அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த இந்த மார்கழி நோன்பு திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் உட்பட அனைத்து பெரு​மாள் கோயில்​களி​லும் ஆண்டாள் பாடிய திருப்​பாவைப் பாடல்​கள் பாடி மிக விமரிசையாக அனுசரிக்கப்படும்.

மார்​கழி மாதத்​தின் முதல் நாளான இன்று (டிச. 16) காலை 10 மணிக்கு ஆண்​டாளுக்கு தங்க இலைகளால், திருப்​பாவை பாடல்​கள் நெய்​யப்​பட்ட 18 கஜம் திருப்​பாவை பட்டு சாற்​றப்​பட்டு சிறப்பு பூஜை நடை​பெறுகிறது.

மேலும் தினசரி காலை 4 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, 4.30 மணிக்கு திருப்​பள்ளி எழுச்​சி​யும், திருப்​பாவை கோஷ்டி​யும் நடை​பெறும்.

இது தவிர மார்​கழி மாதத்​தில் பச்சை பரப்​புதல், பகல்​பத்​து, ராப்​பத்து உற்​சவம், வைகுண்ட ஏகாதசி, எண்​ணெய் காப்பு உற்​சவம், கூடார​வல்லி உற்​சவம் என ஆண்டாளுக்கு பல்​வேறு உற்சவங்களும் நடைபெறும்.

ஆண்டாள் திருப்பாவை 1:

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: இன்று மார்கழியில் முழு நிலா ஒளி வீசும் நல்ல நாள். சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளம் மிக்க சிறுமிகளே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் வேலையை செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

SCROLL TO NEXT ARTICLE