வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே...
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே... [வேலுண்டு...]
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடி வாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்... முருகன்... [வேலுண்டு...]
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்... முருகா... [வேலுண்டு...]
உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய்... முருகா... [வேலுண்டு...]
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா... [வேலுண்டு...]
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே... [வேலுண்டு...]
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா... [வேலுண்டு...]
நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா... [வேலுண்டு...]
ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா... [வேலுண்டு...]
திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா... [வேலுண்டு...]
கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா... [வேலுண்டு...]
வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா... [வேலுண்டு...]
மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா... [வேலுண்டு...]
தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா... [வேலுண்டு...]
வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா... [வேலுண்டு...]
பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா... [வேலுண்டு...]
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே...
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே...
ஓம் சரவண பவாய நமஹ ....